விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-08-21 18:45 GMT
கோவை


கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


விநாயகர் சதுர்த்தி


விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதுதவிர பொது இடங்களிலும் பெரிய வடிவில் விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர்.


கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


அங்கு சனீஸ்வரருடன் அமர்ந்திருக்கும் விநாயகர், விவசாய விநாயகர், கடல்கன்னி உருவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், சிங்க வாகனங்களில் எழுந்தருளிய விநாயகர், முருகன் மோட்டார் சைக்கிள் ஓட்ட பின்சீட்டில் பயணிக்கும் விநாயகர், ராஜகணபதி, டிராகனில் வீற்றிருக்கும் விநாயகர், மயில் மீது அமர்ந்த விநாயகர், சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிக்கப்பட்டு வருகின்றன.


களிமண் சிலைகள்


கோவையில் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கூறியதாவது:-


நாங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண் சிலைக ளையும், பொது இடத்தில் வைப்பதற்காக பிரமாண்ட வடிவில் சிலைகளையும் தயாரித்து வருகிறோம்.


அந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும். அதாவது தண்ணீரில் எளிதாக கரையும் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்ப டுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் தாங்கு திறனை உறுதி செய்ய உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.


10 அடி உயரம்


சிலைகளை 2, 3 நாட்கள் காயவைத்து, அதன்பிறகு சிமெண்ட் பேப்பர் ஒட்டி, வர்ணம் பூசப்பட்டு உள்ளது. அதில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் எனாமல் கலப்பது இல்லை. எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளன.


விநாயகர் சிலைகள் செய்ய தேவையான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. எனவே சிலைகளின் விலையும் தற்போது சிறிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி சிறிய சிலைகள் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டு வருகிறது.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மே மாதம் முதலே சிலை தயாரிப்பு பணிகளை தொடங்கி விட்டோம். கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்து உள்ளன.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்