அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பாதிப்பு

தொடர் மழையால் சிதம்பரம் அருகே அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-11-21 18:45 GMT

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கடந்த பல ஆண்டுகளாக மண்பானைகள், அகல் விளக்குகள், மண் அடுப்புகள் உள்ளிட்ட மண்பானைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி கார்த்தீகை தீபம் கொண்டாடப்படவுள்ளது. கார்த்தீகை தீபத்தின் போது பொதுமக்கள் தங்களது வீடு, கடைகள் மற்றும் கோவில் உள்ளிட்டவற்றில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு குமாரமங்கலத்தை சேர்ந்த மண்டபாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அகல் விளக்குகள் தயாாிக்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு

இதுகுறித்து மண்டபாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் பாரம்பரியமாக அகல்விளக்குகள் மற்றும் பொங்கல் பானைகள், சட்டிகள் உள்ளிட்ட மண்டபாண்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது இதற்கு தேவையான களிமண் மற்றும் மணல் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளதால், எங்களில் பலர் இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் தொடர் மழையால் தற்போது அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு்ள்ளது. இதேபோல் பொங்கல் பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணியும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமான இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் எங்களுக்கு அரசு கடன் உதவி வழங்க வேண்டும். மேலும் நிவாரண உதவிகளையும் வழங்க வேண்டும்.

மழை நீடிக்கும்

இது தவிர எங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் சிரமமின்றி கிடைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த சில நாட்களாக மழை பெய்யாவிட்டாலும், வெயில் அதிகமாக அடிக்கவில்லை. இதனால் கார்த்திகை பண்டிகையை யொட்டி எங்களால் அதிக அளவில் அகல் விளக்குகள் தயார் செய்து அதனை உலர வைக்க முடியவில்லை.

தற்போது நாங்கள் தயாரிக்கும் அகல்விளக்குகள் மற்றும் பொங்கல் பானைகளை வாங்குவதற்காக காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

இருப்பினும் எங்களால் அதிக அளவில் அகல் விளக்குகளை தயார் செய்து கொடுக்க முடியவில்லை. இன்னும் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்