சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 63 நாயன்மார்கள் சிலை அமைக்கும் பணி தீவிரம்

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 63 நாயன்மார்கள் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-08-22 22:27 GMT

கும்பாபிஷேகம்

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவில் வளாகத்தில் தரைத்தள சீரமைப்பு, யாகசாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. கோபுரத்தில் உள்ள வேலைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது.

63 நாயன்மார்கள் சிலை

ஏற்கனவே கோவில் வளாகத்தில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவை தற்போது புதுப்பித்து கோவிலில் ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவிலில் 54 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும் போது, 'சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிக்கு ரூ.98½ லட்சம், சுற்றுச்சுவர் கட்ட ரூ.7.90 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரம் செலவில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மேலும் 54 குண்டங்கள் அமைத்து யாகம் நடக்க உள்ளது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்