கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண், போலீஸ் வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு

நாகையில், விபத்தில் சிக்கி ஆம்புலன்சுக்காக கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண், போலீஸ் வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீஸ் சூப்பிரண்டின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2023-06-05 18:45 GMT

நாகையில், விபத்தில் சிக்கி ஆம்புலன்சுக்காக கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண், போலீஸ் வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீஸ் சூப்பிரண்டின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் மோதியது

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கூத்தூர் ஊராட்சி குருக்கத்தியை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நேற்று முன்தினம் மாலை நாகைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

புத்தூர் ரவுண்டானா அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

போலீஸ் வாகனத்தில் அனுப்பி வைத்த சூப்பிரண்டு

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் முதலுதவி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆம்புலன்சுக்காக தனது கைக்குழந்தையுடன் காத்திருந்தார்.

அப்போது அந்த வழியே வந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், கைக்குழந்தையுடன் ஒரு பெண் நிற்பதை பார்த்து காரில் இருந்து இறங்கி வந்து, அவரிடம் விசாரணை நடத்தினார். அதற்கு அந்த பெண் விபத்து நடந்தது குறித்தும், ஆம்புலன்சுக்காக காத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

உடனடியாக அந்த பெண்ணுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்த போலீஸ் சூப்பிரண்டு, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்று கூறி போலீஸ் வாகனத்தில் அவர்கள் 3 பேரையும் ஏற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பாராட்டு

விபத்தில் சிக்கிய கைக்குழந்தை மற்றும் பெண்ணை சிகிச்சைக்காக உடனடியாக போலீஸ் வாகனத்தில் அனுப்பி வைத்த போலீஸ் சூப்பிரண்டின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்