அழுகிய நிலையில் கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

அழுகிய நிலையில் கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

Update: 2023-05-19 18:45 GMT

நாகை அருகே கருவேலமரக்காட்டில் அழுகிய நிலையில் கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. விசாரணையில் அவர் சென்னையில் நர்சாக வேலைபார்த்து வந்துள்ளாா்.

அழுகிய நிலையில் பெண் பிணம்

நாகை அருகே சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தில் ரெயில்வே லைன் பகுதியில் கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி உள்ளது. இங்கு பெண்கள் சிலர் விறகு வெட்டுவதற்காக நேற்றுமுன்தினம் மாலை சென்றனர். அப்போது அங்கு பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதுகுறித்து சிக்கல் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அடையாளம் தெரிந்தது

இந்தநிலையில் கருவேலமரக்காட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பெண் கீழையூர் அருகே தையான் தோப்பு பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகள் சுஷ்மிதா என்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பக்கிரிசாமிக்கும், அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு இருந்த பெண்ணின் உடலை பார்த்து தனது மகள் சுஷ்மிதா என்று அடையாளம் காட்டினர்.

பின்னர் கருவேலமரக்காட்டு பகுதியில் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் ஜீவிதன் தலைமையில், தஞ்சை தடயவியல் நிபுணர் முன்னிலையில் சுஷ்மிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனியார் ஆஸ்பத்திரி நர்ச்

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போன சுஷ்மிதா (வயது23) நர்சிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலைப்பார்த்து வந்ததும், விடுமுறைக்கு ஊரில் தங்கி இருந்ததும், கடந்த ஏப்ரல் 30-ந்தேதி காலை நாகைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்