மாநிலம் கடந்த காதலால் பிரிந்த பெண் 56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்தினருடன் சந்திப்பு

மாநிலம் கடந்த காதலால் பிரிந்த தனது குடும்பத்தினரை 56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பெண் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் எட்டயபுரம் அருகே நடந்துள்ளது.

Update: 2022-08-24 13:56 GMT

எட்டயபுரம்:

மாநிலம் கடந்த காதலால் பிரிந்த தனது குடும்பத்தினரை 56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பெண் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் எட்டயபுரம் அருகே நடந்துள்ளது.

மாநிலம் கடந்த காதல்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தையைச் சேர்ந்தவர் நம்மாழ்வார் (வயது 80). இவருடைய மனைவி கவுரி பார்வதி (75). இவர்களுக்கு சண்முகராஜ் (49) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

கவுரி பார்வதியின் பூர்வீகம், ஆந்திர மாநிலம் நரசிபட்டணம் ஆகும். கடந்த 1960-ம் ஆண்டு நம்மாழ்வார் நரசிபட்டணத்துக்கு உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக சென்றபோது, கவுரி பார்வதி சந்தித்தார். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.. இவர்களின் காதலுக்கு கவுரி பார்வதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 1966-ம் ஆண்டு நம்மாழ்வார், கவுரி பார்வதியை மேலக்கரந்தைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்தினரை தேடிப்பிடித்த மகன்

கவுரி பார்வதி தனது சொந்த ஊருக்கு சென்றால், தன்னை கணவரிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என்று அஞ்சி குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ளாமல் இருந்தார். எனினும் கவுரி பார்வதி தனது தம்பி மற்றும் 2 தங்கைகளை சந்திக்க முடியவில்லையே என்று ஏங்கியவாறு இருந்தார்.

இந்த நிலையில் தனது 3 பிள்ளைகளுக்கும் திருமணமாகி பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தியை பார்த்த பின்னரும் தனது பூர்வீக சொந்தங்களின் நிலையை அறியாமல் இறந்து விடுவேனோ? என்று கவுரி பார்வதி வேதனையில் ஆழ்ந்தார். தாயாரின் வேதனையை அறிந்த மகன் சண்முகராஜ், ஆந்திர மாநிலம் நரசிபட்டணத்துக்கு சென்று தாயாரின் தம்பி, தங்கைகளை தேடி கண்டுபிடித்தார்.

56 ஆண்டுகளுக்கு பிறகு...

56 ஆண்டுகளுக்கு பிறகு கவுரி பார்வதியின் மகனை பார்த்த உறவினர்களும் தங்களை தாய் மாமன், அத்தை, சித்தப்பா, சித்தி என்று உறவுமுறை கூறி அடையாளப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் நேற்று முன்தினம் வேனில் மேலக்கரந்தைக்கு வந்து கவுரி பார்வதியை சந்தித்தனர். அவர்களுக்கு தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் அறிமுகப்படுத்திய கவுரி பார்வதி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

இதனை குடும்ப விழாவாக கொண்டாடிய இரு சொந்தங்களும் தங்களது உறவினர்களை வரவழைத்து நம்மாழ்வார்- கவுரி பார்வதி தம்பதியிடம் ஆசி பெற்று மகிழ்ந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்