அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

பழனி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, பெண்ணை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-17 14:33 GMT

அரசு மருத்துவமனை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியன் (வயது 43). லாரி டிரைவர். அவருடைய மனைவி கற்பகம் (34). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு கற்பகம், பழனியை அடுத்த வி.கே.மில்ஸ் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

எனினும் மணியன், வி.கே.மில்ஸ் பகுதிக்கு அவ்வப்போது சென்று கற்பகத்திடம், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு கூறி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவும் தகராறு செய்துள்ளார்.

அரிவாள் வெட்டு

இந்நிலையில் நேற்று காலை கற்பகம், உடல்நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற பழனி அரசு மருத்துவமனைக்கு வந்தார். ஆஸ்பத்திரி வளாகத்தில் மருந்தகம் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணியன், கற்பகத்திடம் தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கற்பகத்தை வெட்ட முயற்சித்தார். இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் மணியன் கற்பகத்தின் கை, கால்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார்.

நோயாளிகள் ஓட்டம்

மருத்துவமனைக்குள் புகுந்து அரிவாளால் பெண்ணை வெட்டியதை கண்டு அங்கு நின்ற நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த மருத்துவமனை காவலர்கள், ஊழியர்கள் அங்கு நின்ற மணியனை மடக்கி பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த கற்பகத்தை, குடும்ப பிரச்சினையில் மணியன் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியனை கைது செய்தனர்.

தீவிர சிகிச்சை

இதற்கிடையே காயமடைந்த கற்பகத்தை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் மருத்துவமனையில் புகுந்து, பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்