திறப்பு விழா கண்ட வேகத்தில் மூடப்பட்ட வாரச்சந்தை

விழுப்புரம் அருகே திறப்பு விழா கண்ட வேகத்தில் மூடப்பட்ட வாரச்சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-06-29 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரத்தை அடுத்த சூரப்பட்டு பகுதியில் பல ஆண்டுகளாக வாரந்தோறும் புதன்கிழமையன்று வாரச்சந்தை நடந்து வந்தது. இந்த சந்தைக்கு சூரப்பட்டு, கெடார் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் சாகுபடி செய்த காய்கறிகள் மற்றும் ஆடு, மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

இந்த சந்தைக்கு விழுப்புரம், செஞ்சி ஆகிய தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சென்று பொருட்களை வாங்கி வருவார்கள். இதனால் ஒவ்வொரு புதன்கிழமைதோறும் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த சந்தைக்கு போதுமான இடவசதி இல்லாததால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

அடிப்படை வசதி இல்லை

இதன் பலனாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தைக்காக சூரப்பட்டு மேம்பாலம் அருகே இடம் ஒதுக்கப்பட்டு அங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டதால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள், தங்களது விளைநிலங்களில் சாகுபடி செய்த காய்கறிகள் மற்றும் ஆடு, மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். பொதுமக்களும் அங்கு அதிகளவில் வந்து பொருட்களை வாங்கிச்சென்றனர்.

ஆனால் வாரச்சந்தைக்கு வரக்கூடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட எந்தவொரு வசதிகளும் இல்லாததால் நாளடைவில் வாரச்சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.

சமூகவிரோதிகள் அட்டகாசம்

இதன் காரணமாக வாரச்சந்தை திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே மூடப்பட்டது. அதன் பிறகு அந்த வாரச்சந்தையை திறக்கவோ, அங்கு அடிப்படை வசதிகளை செய்து தரவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த வாரச்சந்தை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி இருந்து வருகிறது.

இதை சமூகவிரோதிகள் பலர், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த கட்டிடத்தில் அட்டகாசம் செய்து வருகின்றனர். பட்டப்பகலிலேயே அந்த கட்டிடத்தினுள் அமர்ந்து மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது அந்த கட்டிடத்தை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால் வாரச்சந்தை கட்டிடம் இருக்கும் இடமே பலருக்கு தெரியாமல் உள்ளது.

பயன்பாட்டுக்கு வருமா?

தற்போது தமிழகம் முழுவதும் உழவர்சந்தையை விரிவுப்படுத்தி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களிலும் உழவர்சந்தையில் விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்ட கலெக்டர், இதில் உடனடியாக தலையிட்டு சூரப்பட்டில் பயன்பாடின்றி இருந்து வரும் வாரச்சந்தை கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்