கள்ளகவுண்டன்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் குடிநீர் குழாயை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்து மனு
கள்ளகவுண்டன்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் குடிநீர் குழாயை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனா்
கள்ளக்கவுண்டன்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் குடிநீர் குழாயை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
குடிநீர் குழாய்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கஸ்பாபேட்டை அருகே உள்ள கள்ளகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கஸ்பாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஈரோடு -காங்கேயம் பிரதான ரோட்டில் இருந்து கள்ளகவுண்டன்பாளையம் செல்லும் குறுகலான ரோட்டில் இடது புறத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாயும், வலது புறத்தில் ஊராட்சியின் மூலம் குடிநீர் குழாயும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 2 அடி குழாய் சாலை ஓரத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ரோடு குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளன. எனவே இந்த ரோட்டின் ஓரத்தில் குழாய் பதித்தால் வரும் நாட்களில் அந்த வழியே வாகனங்கள் செல்ல முடியாது. மழை பெய்யும்போது, குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் சிக்கிக்கொள்ளும். எனவே, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாற்றுப்பாதையில் குடிநீர் குழாய் கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
பயிர்கடன்
கஸ்போட்டை மற்றும் திண்டல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க விவசாயிகள் கொடுத்திருந்த மனுவில், 'ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களில் நாங்கள் விவசாய கடன் பெற்றோம். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி எங்களை தொடர்பு கொண்டு, உடனடியாக கூட்டுறவில் பெற்ற பயிர் கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதன்படி உரிய தொகையை செலுத்தி ரசீது பெற்றோம்.
இந்த நிலையில் தமிழக அரசு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ததாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து எங்களது பயிர் கடன் முழு தொகை, வட்டியை இணைத்து தள்ளுபடி செய்ததாக சான்றிதழ் வழங்கினர். இதனால் நாங்கள் செலுத்திய தொகை இதுநாள் வரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. எங்களை போன்று மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே அந்த தொகையை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறி இருந்தனர்.
315 மனுக்கள்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில், 'கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு விதிமுறைகளுக்கு விரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார். இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 315 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து 31 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.55 லட்சத்து 40 ஆயிரம் வங்கி கடன் உதவியும், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.