சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8¾ அடியாக குறைந்தது

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8¾ அடியாக குறைந்து விட்டது.

Update: 2023-04-10 18:45 GMT

கோவை

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8¾ அடியாக குறைந்து விட்டது.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் 100 எம்.எல்.டி. (10 கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்க முடியும்.

ஆனால் பாதுகாப்பு நடவடிக்கை என்றுக்கூறி 45 அடிக்கும் மேல் அணையில் தண்ணீரை தேக்க கேரள அரசு அனுமதிக்கவில்லை. சில நேரத்தில் 42 அடியை தாண்டிவிட்டாலே அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீரை திறந்து விட்டு வருகிறது.

8¾ அடியாக குறைந்தது

இந்த அணை ஒரு முறை 50 அடியை தொட்டுவிட்டால் ஆண்டு முழுவதும் எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் கோவை மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும். ஆனால் கேரள அதிகாரிகள் அதற்கு அனுமதிக்காததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 8¾ அடியாக இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்கு 40 எம்.எல்.டி. (4 கோடி லிட்டர்) எடுக்கப்பட்டது.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

3-வது வால்வு வெளியே தெரிந்தது

சிறுவாணி அணையில் உள்ள நீரேற்று நிலையத்தில் தண்ணீரை உறிஞ்சி எடுக்க 4 வால்வுகள் உள்ளன. அதில் 3 வால்வுகள் கீழ்நோக்கியும், 4-வது வால்வு மேல்நோக்கியும் இருக்கும். தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் 3-வது வால்வு வெளியே தெரிகிறது.

தற்போது அணையில் இருந்து 40 எம்.எல்.டி. தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது. அதில் மாநகர பகுதிக்கு 36 எம்.எல்.டி. வழங்கப்பட்டது. இதே அளவு தண்ணீரை எடுத்தால் அடுத்த மாதம் இறுதி வரை தண்ணீர் எடுக்க முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முழு கொள்ளளவுக்கு அனுமதி

இது குறித்து கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கேரள அரசு 50 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதி அளித்து இருந்தால் மாநகர பகுதியில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை. எனவே இனியாவது கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த அணையில் 50 அடிக்கு தண்ணீரை தேக்க அனுமதி பெற வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்