அரசு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து 4 பசு மாடுகள் சாவு
தியாகதுருகம் அருகே அரசு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து 4 பசு மாடுகள் சாவு பாதிக்கப்பட்டவர்களுக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தின் தெற்கு தெருவில் 1963-ம் ஆண்டில் திறக்கப்பட்ட கூட்டுறவு சங்க கிடங்கு பயன்பாட்டில் இல்லாமல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடந்தது. நேற்று முன்தினம் தியாகதுருகம் பகுதியில் பெய்த மழையால் இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து அருகில் கட்டிப்போடப்பட்ட ஏழுமலை(வயது 70) என்பவருக்கு சொந்தமான 4 பசுமாடுகள் மீது விழுந்தது. இதில் 4 பசுமாடுகளும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. மேலும் அருகில் உள்ள சாரங்கபாணி என்பவரது வீட்டு சுற்று சுவரின் மீது இடிபாடுகள் விழுந்ததால் வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்ததோடு, வீட்டில் இருந்த பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.
இதுபற்றிய தகவலறிந்து வந்த ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான வசந்தம் கார்த்திகேயன் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் பசுமாடுகளை இழந்த ஏழுமலைக்கு அதிகாரிகளுடன் பேசி உரிய அரசு நிவாரணம் கிடைக்க வழி செய்வதாக கூறிய வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடத்தை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், துணைத்தலைவர் நெடுஞ்செழியன், சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பன்னீர்செல்வம், இந்திராணி, ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை உள்பட பலர் உடன் இருந்தனர்.