பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து 5 மாணவிகள் காயம்

எட்டயபுரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்தபோது பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 மாணவிகள் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-06 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்தபோது பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 மாணவிகள் காயம் அடைந்தனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இங்கு எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதியான பிள்ளையார்நத்தம், படர்ந்தபுளி, சிந்தலக்கரை சமத்துவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக நேற்று காலையில் வந்தனர்.

5 மாணவிகள் காயம்

தேர்வு தொடங்குவதற்கு முன்பாக சில மாணவிகள் கழிவறைக்கு சென்றனர். அப்போது, திடீரென்று கழிவறையின் கட்டிடத்தின் வெளியே இருந்த சுமார் 4 அடி சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் அங்கு நின்ற 5 மாணவிகள் காயம் அடைந்தனர்.

அதாவது பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் மகள் வர்ஷினி (வயது 16), முனியராஜ் மகள் இசக்கி பிரியா (16), படர்ந்தபுளியை சேர்ந்த செல்வக்குமார் மகள் விஜயபிரியா (15), அழகுராஜ் மகள் மகரஜோதி (15), சிந்தலக்கரை சமத்துவபுரத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் மாரியம்மாள் (15) ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர்.

கை, கால்களில் வீக்கம்

இதுகுறித்து தேர்வு மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக விரைந்து வந்து மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதை தொடர்ந்து 5 மாணவிகளும் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1.15 மணி அளவில் தேர்வு முடிந்ததும் அந்த மாணவிகள் வெளியே வந்தனர்.

அப்போது, 5 மாணவிகளுக்கும் கை, கால்களில் வீக்கம் இருந்தது. பின்னர் அங்கு வந்த மாணவிகளின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தினார்.

பெற்றோர்கள் போராட்டம்

தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மாலையில் பள்ளி முன்பு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது, தாசில்தார் கிருஷ்ணகுமாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'பள்ளியில் உள்ள கழிப்பறையில் இடியும் தருவாயில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும். கழிப்பறையை சுற்றியுள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும். அடுத்து வரும் தேர்வுகளில் மாணவிகளால் எழுத முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களை துணை ஆள் கொண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என்றனர்.

இதனை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

-----------------

(பாக்ஸ்) 'வலியுடன் தேர்வு எழுதினோம்'- படுகாயம் அடைந்த மாணவிகள்

கழிப்பறை கட்டிட சுவர் விழுந்த சம்பவத்தில் காயம் அடைந்த மாணவிகள் கூறியதாவது:-

தேர்வு அறைக்கு செல்வதற்கு முன் நாங்கள் கழிப்பறைக்கு சென்றோம். அப்போது அங்கிருந்து சுவர் இடிந்து எங்கள் மீது விழுந்தது. இதில் நாங்கள் காயமடைந்தோம். யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. பின்னர் தேர்வறையில் எங்களுக்கு ஜூஸ் வழங்கினர். மேலும் மருந்து, ஸ்பிரே அடித்தனர். நாங்கள் வலியுடன் தான் தேர்வு எழுதினோம். தேர்வு முடிந்த பின்னர் எங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து எங்களை அழைத்து சென்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்

"மாணவிகள் காயமடைந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக அவர்களுக்கு ஆசிரியைகள் மூலம் தனி அறையில் வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறோம் என கூறினோம். ஆனால் அவர்கள் பெரியதாக வலி இல்லை. தேர்வு எழுதுகிறோம் என்றனர். அதனால் தான் மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்தோம். அவர்களுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்து வரும் தேர்வுகளில் அவர்களுக்கு தேவைப்பட்டால் துணை ஆள் மூலமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.

---------------

Tags:    

மேலும் செய்திகள்