துர்நாற்றத்துடன் குடிநீர் வருவதை கண்டித்து கிராம மக்கள் தர்ணா

பாம்பை கொன்று கிணற்றில் வீசியதால் துர்நாற்றத்துடன் குடிநீர் வருவதை கண்டித்து நக்கசேலம் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-20 19:03 GMT

'திடீர்' தர்ணா

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட புது அம்மாபாளையம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லலிதா அவர்களிடம் எதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் கலெக்டரை சந்தித்து தான் பேசுவோம் என்று கூறி தர்ணாவை தொடர்ந்தனர்.

முயல் வேட்டை திருவிழா

அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முயல் வேட்டை திருவிழாவில் காட்டிற்கு வேட்டையாட வந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு பாம்பை அடித்து கொன்று எங்கள் கிராமத்தின் குடிநீர் கிணற்றில் வீசி விட்டு சென்றனர். இதனால் கிணற்று தண்ணீர் துர்நாற்றம் வீசி கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அவர்கள் ஆட்டை அடித்து கொன்று கிணற்றில் வீசினர்.

கிணற்றில் வீசப்பட்ட பாம்பு வெளியே எடுத்து போடப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் கிணற்றின் தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யாமல், தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி கிராம பொதுமக்களுக்கு தெரு குழாய்கள் மூலம் வினியோகித்து வருகின்றனர். தண்ணீர் துர்நாற்றத்துடன் கலங்கலாகவே வந்து கொண்டிருக்கிறது.

நடவடிக்கை எடுக்கவில்லை

கிணற்றை சுத்தம் செய்யக்கோரி நக்கசேலம் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நாங்கள் கலெக்டரை பார்க்க செல்வதை அறிந்து ஊராட்சி நிர்வாகம் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்க வந்தனர். எங்களுக்கு கிணற்றில் தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பாம்பை கொன்று கிணற்றில் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணற்றின் மேல் இரும்பிலான வலை அமைத்து மூட வேண்டும்.

கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் கலங்கலாகவே வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும். எங்கள் ஊா் வழியாக காவிரி குடிநீர் நக்கசேலத்திற்கு செல்கிறது. இதனால் எங்கள் கிராமத்திற்கும் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராமத்தில் கழிவுநீர் வடிகால் வசதி, சாலை வசதி, போதிய அளவு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

அதிகாரிகள் விரைந்தனர்

மேலும் அவர்கள் கிணற்றில் இருந்து பாட்டிலில் எடுத்து வரப்பட்ட கலங்கலான குடிநீரை அதிகாரியிடம் கொடுத்தனர். கிராம மக்களின் தர்ணா போராட்டம் குறித்து ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லலிதா கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த கலெக்டர் கற்பகம் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனரையும், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அருளாளனையும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் புது அம்மாபாளையம் கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் புது அம்மாபாளையம் கிராம பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து கிராமத்திற்கு சென்றனர். கிராம மக்களின் தர்ணா போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகம் சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்