ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கிராமமக்கள் திடீர் மறியல்
சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கிராமமக்கள் திடீர் மறியல் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் உள்ள ரெயில்வே கேட்டை மூடி விட்டு அதற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவுசெய்தது. இதற்கான பணிகள் நேற்று தொடங்குவதாக இருந்தது.
இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் அங்கே திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுரங்கப்பாதை அமைத்தால் அதன் உள்ளே மழை நீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படும், 2 ஏக்கர் விவசாய நிலங்களில் அறுவடை செய்த விளை பொருட்களை கனரக வாகனங்களில் சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக விரைவில் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என உறுதி அளித்தார். இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.