கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து பூட்டிய கிராம மக்கள்
ஊத்துமலை அருகே கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குளம்:
ஊத்துமலை அருகே கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அலுவலகத்தில் வைத்து பூட்டினர்
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை அருகே முத்தம்மாள்புரம் கிராம நிர்வாக அலுவலராக சக்திவேல் (வயது 55) பணிபுரிந்து வருகிறார். இப்பகுதியில் முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் சுமார் 600 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் மனுக்கள் மற்றும் அரசு திட்டங்களுக்கான சலுகைகளை பெற சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது முறையாக செயல்படவில்லை எனவும், இன்று, நாளை என தொடர்ந்து அலைக்கழிப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து பூட்டினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் ராமர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராம நிர்வாக அலுவலரை மீட்டார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிரதம மந்திரியின் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த மாதம் உளுந்து பயிர் செய்துள்ளதாக வழங்கப்பட்ட அதே இடத்திற்கு வாழை பயிரிட்டுள்ளதாகவும், அடங்கல் கேட்டதால் அதை கிராம நிர்வாக அலுவலர் வழங்க மறுத்ததை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலருக்கும், பொதுமக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அவரை அலுவலகத்தில் வைத்து பூட்டியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.