தாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கன்னிவாடி அருகே, தாசில்தாரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-01 16:20 GMT

கன்னிவாடி அருகே கோனூர் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள காலியிடத்தில் 10 கடைகள் கட்டி கோவில் பெயரில் வரி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனியார் சிலர், கடைகளை காலி செய்யக்கோரி திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு உத்தரவுப்படி கடைகளை அகற்ற வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் காலை, திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ரமேஷ்பாபு அங்கு வந்தார். இதனையறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து தாசில்தாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது, இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தாசில்தாரை கிராம மக்கள் விடுவித்தனர். தொடர்ந்து கோனூரில், பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்