குரங்குகள் அட்டகாசத்தால் கதறும் கிராம மக்கள் கூண்டு வைத்து பிடிக்கப்படுமா?

மங்களூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் கதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-25 18:45 GMT

சிறுபாக்கம், 

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் உள்ளது மங்களூர் ஊராட்சி. விவசாயமே இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக இருப்பதால், நெல் உள்ளிட்ட தானியங்களை சாகுபடி செய்து வருகின்றனர். மங்களூரை சுற்றிலும் காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்புக்காட்டில் இருந்து அவ்வப்போது குரங்குகள் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடும். அவ்வாறாக கடந்த ஓராண்டில் மங்களூர் மற்றும் சிறுபாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்குள் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் புகுந்து கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. இவைகளின் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என்றே கூறலாம்.

வீடு, கடைகளுக்குள் புகுந்து...

குரங்குகள் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள உணவு, தானியங்களை தின்றுவிடுகின்றன. மேலும் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள ஓட்டல்கள், பெட்டிக்கடைகளுக்குள்ளும் புகுந்து உணவு பொருட்களை சூறையாடி செல்கின்றன. இதுமட்டுமின்றி, நடந்து செல்லும் சிறுவர்கள், பெரியோர்களை துரத்தி துரத்தி விரட்டுவதுடன், அவர்கள் கொண்டு செல்லும் பொருட்களை பறித்து செல்கின்றன.

வனப்பகுதியில் விட வேண்டும்

அப்போது, குரங்குகளை விரட்டும் வியாபாரிகள், பொதுமக்கள், பெரியோர்களை சீறி கடித்து செல்வதால், அவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தெருவில் நடமாட அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் தங்களின் வயல்களில் சாகுபடி செய்த மணிலா, மக்காச்சோளம், காய்கறிகளை தின்று நாசம் செய்வதால், பயிர்கள் அழிகின்றன. இதனால், மாற்று பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்யும் சூழல் உள்ளது. எனவே, மங்களூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்