கரூரில் சாவிலும் இணைபிரியாத தம்பதி

கரூரில் தம்பதி ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Update: 2022-08-24 18:05 GMT

வயதான தம்பதி

கரூர் ஜவகர்பஜார் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 75). இவர் கரூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஸ்ரீ லட்சுமி (70). இவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதியின் 2 மகள்களுக்கும் திருமணமாகி ஒருவர் ஈரோட்டிலும், மற்றொருவர் திருநள்ளாறிலும் தங்கள் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீலட்சுமி உடல்நல குறைவால் வீட்டில் படுத்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து ராமகிருஷ்ணன் பணி ஓய்வு பெற்ற நிலையில் தன் மனைவியை கவனித்து கொண்டு, தங்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

சாவு

இந்நிலையில் நேற்று மதியம் ராமகிருஷ்ணன் சமையலறைக்கு சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீ லட்சுமி சத்தமிட்டவாறு அவரும் மயங்கினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். பின்னர் இருவரையும் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 50 ஆண்டு காலம் ஒன்றாக வாழ்ந்த தம்பதி சாவிலும் ஒன்றாக இணைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்