தமிழ்மொழியின் தனித்தன்மை, சிறப்புகளை பாதுகாக்க வேண்டும்மாணவர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுரை

தமிழ்மொழியின் தனித்தன்மை, சிறப்புகளை பாதுகாக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுரை கூறினார்.

Update: 2023-07-18 18:45 GMT


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த "தமிழ்நாடு நாள் விழா" சிறப்பு புகைப்பட கண்காட்சியின் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன் முன்னிலை வகித்தார். தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அதில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு உருவான வரலாறு, தமிழ்நாட்டின் சிறப்புகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க செயல் திட்டங்கள், தமிழ்மொழியின் தனித்தன்மை போன்ற பல்வேறு அரிய புகைப்படங்களை பார்வையிட்டார்.

விழிப்புணர்வு பேரணி

அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, தமிழ்நாடு உருவான வரலாறு மற்றும் தமிழ்நாட்டின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலமாகவும் தமிழ்நாடு நாள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் 3 இடங்களை பிடித்த 6 மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

மாணவர்களுக்கு அறிவுரை

அப்போது அவர் பேசுகையில், நாம் ஒவ்வொருவரும் நம் தாய் தமிழ்நாடான தமிழ்நாடு உருவான வரலாறு, தமிழ்மொழியின் தனித்தன்மை மற்றும் சிறப்புகளை அறிந்துகொண்டு பாதுகாப்பதோடு வருங்கால சந்ததியினருக்கு அதுபற்றி எடுத்துக்கூற வேண்டும். எனவே பொதுமக்கள், மாணவ- மாணவிகள் அனைவரும் தமிழ்நாடு நாள் விழா குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என்றார். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சுகபுத்ரா, விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், தாசில்தார் வேல்முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) கலைமாமணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்