ஆசனூர் அருகே லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த காட்டு யானை
ஆசனூர் அருகே லாரியை வழிமறித்து கரும்பை காட்டு யானை சுவைத்தது.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
வனப்பகுதிக்குள் இருக்கும் யானைகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாைலயோரம் வந்து நின்றுவிடுகின்றன.
அவ்வாறு வரும் யானைகள் அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை மறித்து கரும்புகளை சுவைத்து பழகிவிட்டன. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. ஆசனூர் அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த ஒரு காட்டு யானை திடீரென நடுரோட்டுக்கு ஓடிவந்து லாரியை மறித்தது. இதனால் பயந்துபோன டிரைவர் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு இறங்கி ஓடினாார்.
அதன்பின்னர் யானை லாரியில் இருந்த கரும்புகளை எடுத்து சுவைக்க தொடங்கியது. இதனால் அந்த வழியாக வந்த எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு யானை தானாக காட்டுக்குள் சென்றது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.