மெத்தையை கயிறு கட்டி இறக்கும்போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி
மெத்தையை கயிறு கட்டி இறக்கும்போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.;
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 67). இவர், மெத்தை வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வடபழனி, வேல்முருகன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வரும் தனது மகள் பரமேஸ்வரி வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது பரமேஸ்வரி வீட்டின் பக்கத்து பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் நாராயணன் என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகராஜ் மெத்தை ஒன்று விலைக்கு கொடுத்துள்ளார். ஆனால் அந்த மெத்தையின் அளவு சரியாக இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மெத்தையை தானே எடுத்து கொண்டு புதிய மெத்தை மாற்றி தருவதாக நாகராஜ் கூறினார். இதற்காக நாகராஜ், அந்த வீட்டின் 3-வது மாடியில் உள்ள ஜன்னல் பக்கவாட்டு சுவரில் ஏறி நின்றபடியே நாராயணன் வீட்டில் இருந்த மெத்தையை கயிறு கட்டி கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய நாகராஜ், 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.