திருமங்கலம்-மதுரை இரட்டை ரெயில் பாதை பணிகள் மார்ச் மாதத்தில் முடிவடையும்

திருமங்கலம்-மதுரை இரட்டை ரெயில் பாதை பணிகள் மார்ச் மாதத்தில் முடிவடையும் என்று தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல் தெரிவித்தார்.

Update: 2022-12-08 19:27 GMT

திருமங்கலம்-மதுரை இரட்டை ரெயில் பாதை பணிகள் மார்ச் மாதத்தில் முடிவடையும் என்று தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல் தெரிவித்தார்.

தென்னக பொதுமேலாளர் ஆய்வு

தென்னக ரெயில்வேயின் கீழ் உள்ள கோட்டங்களில் பொதுமேலாளர் ஆர்.என்.சிங் அலுவல் சார்ந்த ஆய்வு நடத்தி வருகிறார். அதனை தொடர்ந்து, மதுரை கோட்டத்தில் அவர் நேற்று தனது ஆய்வை தொடங்கினார். அப்போது, மதுரை ரெயில் நிலையத்தில் தொடங்க உள்ள ரூ.430 கோடி திட்ட மதிப்பிலான ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகள் குறித்த விவரங்களை கட்டுமான பிரிவு என்ஜினீயர்களிடம் கேட்டார். இதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுரங்கப்பாைத

மதுரை ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் 3 மாதங்களுக்குள் இடிக்கப்படும். அதன் பின்னர் பணிகள் தொடங்கி 36 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஆர்.எம்.எஸ். ரோட்டில் இருந்து பெரியார் பஸ் நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகளும் அடங்கும். பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். மழைக்காலங்களில் பயணிகளுக்கு இடையூறாக தண்ணீர் தேங்கும் பிரச்சினை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து புதிய கட்டுமான பணிகளின் போது தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வந்தேபாரத் ரெயில்

பாம்பன் புதிய பாலப்பணிகள், திருமங்கலம்-மதுரை இரட்டை அகலப்பாதை பணிகள் ஆகியன வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். கன்னியாகுமரி-சென்னை இரட்டை அகலப்பாதை தடத்தில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப வந்தேபாரத் உள்ளிட்ட புதிய ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து, கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், மதுரை-தூத்துக்குடி, நெல்லை இடையே நடந்து வரும் இரட்டை அகலப்பாதை பணிகளை சிறப்பு ரெயில் மூலம் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, கோட்ட மேலாளர் அனந்த், தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ஆர்.வி.என்.எல். திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, தலைமை என்ஜினீயர் தவமணி பாண்டி, துணைத்தலைமை என்ஜினீயர் நந்தகோபால், கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்