பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும்

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-10 19:43 GMT

பண்டிகைகள் பல இருந்தாலும் அதிக அளவில் மகிழ்ச்சியை கொடுப்பது தீபாவளி பண்டிகைதான். இ்ந்த பண்டிகையை இன்னும் குதூகலப்படுத்துவது பட்டாசுகள்.

நேர கட்டுப்பாடு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க பல்வேறு காரணங்கள் கூறி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தாயில்பட்டி, சாத்தூர், வெம்பக்ேகாட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்டாசு தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

பட்டாசு வியாபாரி டேனியல் கூறுகையில், சிவகாசியில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு பல கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் குறைந்த அளவிலான பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகும். இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு எதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

கட்டுப்பாடு கூடாது

மணிகண்டன்:- மகிழ்ச்சிக்காகதான் பட்டாசு வெடிக்கப்படுகிறது. அதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் எப்படி? குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரத்தில் தான் பட்டாசுகளை வெடித்து வருகிறோம். அதற்கு காலை ஒரு மணி நேரம், இரவு 1 மணி நேரம் என்றால் ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிக்கும் போது இடையூறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே தற்போது அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெற வேண்டும். நேரகட்டுப்பாட்டை கட்டாயப்படுத்தினால் சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 25 சதவீதம் கூட விற்பனையாகாமல் போய் விடும். இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகாமல் ஆலை உரிமையாளர்களும், பட்டாசு கடைக்காரர்களும் நஷ்டம் அடைவார்கள். இந்த தொழில் மூலம் வாழ்வாதாரம் பெறும் 8 லட்சம் தொழிலாளர்கள் அடுத்த ஆண்டு வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

விற்பனை குறையும்

விஜயகரிசல்குளம் பவுன்ராஜ்:-

தீபாவளி பண்டிகை வருடத்தில் ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படுவது. அளவில்லாத மகிழ்ச்சியை தரக்கூடிய பட்டாசை வெடிக்க 2 மணி நேரத்தில் கொண்டாடுவது நடைபெறாத காரியம். பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். நேர கட்டுப்பாட்டால் மகிழ்ச்சியும் குறைகிறது. விற்பனையும் குறையும்.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தொழிலாளி மாடசாமி:-

பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. 2 மணி நேரம் என்பது போதுமானது அல்ல. ஆதலால் கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

விபத்து அபாயம்

சாத்தூரை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் ஜானகிராமன்:-

தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடுவது நமது பாரம்பரியம். குழந்தைகளின் சந்தோசத்திற்காக வெடி வெடித்து உறவினர்களுடன் கொண்டாடப்படும். நாள். குழந்தைகளின் சந்தோஷத்திற்கு விதிக்கப்படும் நேர கட்டுப்பாட்டால் பாரம்பரியம் அழியும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நேர கட்டுப்பாட்டினால் அவசர, அவசரமாக குழந்தைகள் பட்டாசு வெடிப்பதால் அதிக விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே நேர கட்டுப்பாடு தேவையற்றது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் இருப்பதால் நேர கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும்.

இரவு வரை அனுமதி

விருதுநகரை சேர்ந்த பட்டாசு கடை உரிமையாளர் பாஸ்கரன் கூறுகையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு கூடாது. பட்டாசுகளை இரவு 10 மணி வரை வெடிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அதன் பின்னர் பட்டாசு வெடித்தால்தான் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். ஆகவே பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்