ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-06-04 17:08 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி குமரன்நகர் பகுதியை சேர்ந்தவர் போஸ்கோ ராஜா மனைவி சகாய சித்ரா (வயது 52). இவர் கடந்த மாதம் 11-ந்தேதி போல்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரது கழுத்தில் கிடந்த 7¼ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்த வழக்கில் 19 வயது வாலிபரை வடபாகம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தாலி சங்கிலி மற்றும் சங்கிலி பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோல் கடந்த மாதம் 28-ந்தேதி கயத்தாறில் இருந்து கடம்பூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் விற்பனை செய்ததாக கயத்தாறு சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உச்சிமகாளி (வயது 45), கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (29), கயத்தாறு சாலிவாகனார் தெருவை சேர்ந்த சிவன் மகன் சுடலைமணி (33) ஆகிய 3 பேரையும் கயத்தாறு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் மதிப்பிலான 9½ கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 58 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை கலெக்டர் செந்தில்ராஜ் ஏற்று, உச்சிமகாளி, மணிகண்டன், சுடலைமணி மற்றும் 19 வயது வாலிபர் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் உள்பட மொத்தம் 110 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்