அம்மன் கழுத்தில் கிடந்த தங்கத்தாலி திருட்டு

நத்தம் காளியம்மன் கோவிலில், அம்மன் கழுத்தில் கிடந்த தங்கத்தாலியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-27 15:36 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் வழக்கம்போல் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பூசாரி, அருகில் உள்ள விநாயகர் சிலைக்கு பூஜை செய்ய சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சாமி கும்பிடுவது போல் நடித்து, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்கத்தாலி மற்றும் பூஜை தட்டில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டார்.

விநாயகர் சிலைக்கு பூஜை செய்து விட்டு திரும்பிய பூசாரி அம்மனின் தங்கத்தாலி, பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, சாமி கும்பிடுவது போல நடித்து ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை அடிப்படையாக கொண்டு போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்