வாணாபுரம் அருகேவிவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு :சிறுவன் உள்பட 3 பேர் கைது
வாணாபுரம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த தொண்டனந்தல் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வல்லப்பநாதன். விவசாயி. இவரது மனைவி மேரி (வயது 58). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி சாவியை பக்கத்தில் உள்ள மாடத்தில் வைத்து விட்டு கூலி வேலைக்கு சென்றார்.
பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் பீரோவில் பணம் வைத்திருந்த பை வெளியே கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மேற்கொண்டு நகைகள் இருந்த பையை தேடி பார்த்தார். ஆனால் அந்த பை அங்கு இல்லை. அதில் இருந்த 8½ பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் பகண்டை கூட்டுரோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், போலீசார் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மேரி வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் மேரி தனது வீட்டு சாவியை வைக்கும் இடம் பற்றி அறிந்த நபர்கள் தான், இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் உறுதி செய்தனர்.
3 பேர் கைது
அதன்பேரில், அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் தான் சாவியை பயன்படுத்தி கதவை திறந்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடியது தெரியவந்து. இதைடுத்து, அதேபகுதியை சேர்ந்த விக்டர் மகன் ராகுல் ரோஷன் (18), மார்ட்டின் மகன் அந்தோணி ராஜ் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த நகை, ரூ. 2 ஆயிரத்தை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.