விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

கீழ்பென்னாத்தூர் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-27 17:28 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விவசாயி

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 29), விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் பார்த்திபன் மற்றும் அவரது மனைவி உத்தராம்பாள் இருவரும் நேற்று  காலையில் விவசாய பணிக்காக சென்றனர்.

பின்னர் பகல் 1 மணியளவில் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணம் திருட்டு

மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ கதவு திறந்திருந்தது. அதிலிருந்த 11 பவுன் நகைகள், 5 வெள்ளி கொலுசுகள், ரூ.60 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. திருட்டுப் போன நகை, வெள்ளி பொருட்கள் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும்.

திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்