தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10¾ பவுன் நகை திருட்டு

வேலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10¾ பவுன் நகையை திருடிய பெங்களூரு வாலிபரை சில மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-22 17:07 GMT

வேலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10¾ பவுன் நகையை திருடிய பெங்களூரு வாலிபரை சில மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

நகை திருட்டு

வேலூரை அடுத்த சித்தேரி அங்காடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி அர்ச்சனா. கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள். அவர்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கணவன்-மனைவி வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றனர்.

மதியம் 1 மணியளவில் ரமேஷ்பாபு மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10¾ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ரமேஷ்பாபு மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ரமேஷ்பாபுவின் வீட்டிற்குள் மர்மநபர் சென்று வரும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து மர்மநபரின் புகைப்படத்தின் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மர்மநபர் பெங்களூரு அனேக்கல் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் வினோத் (36) என்பதும், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்ததும், கடந்த மாதம் வினோத் ஜெயிலில் இருந்து சென்றதும் தெரிய வந்தது.

பெங்களூரு வாலிபர் கைது

இதையடுத்து ரமேஷ்பாபுவின் வீட்டின் அருகே உள்ள செல்போன் டவரில் பதிவாகியிருந்த வினோத்தின் செல்போன் எண் மூலம் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் கிருஷ்ணகிரி அருகே வாகனத்தில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் காரில் அங்கு விரைந்தனர். இதற்கிடையே கிருஷ்ணகிரியில் இருந்து வினோத் பஸ்சில் ஓசூருக்கு செல்வதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் காரில் விரைந்து சென்று சூளகிரி அருகே பஸ்சை மடக்கி அதில் இருந்த வினோத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 10¾ பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

நகை திருட்டு நடந்த சில மணி நேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்