கோவில் குளத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதால் அவதி

நாகூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் குளத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-10-04 18:45 GMT

நாகூர்:

நாகூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் குளத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தீர்த்த குளம்

நாகூரில் பிரசித்திபெற்ற அலமேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் பிரமோற்சவம், தீர்த்தவாரி உள்ளிட்ட உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் இக்கோவிலின் தீர்த்த குளத்தை தூர்வாரி மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது இந்த கோவில் குளத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. இதனால் இந்த குளத்து நீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, பாதாள சாக்கடையை அகற்றி கொடுத்தனர்.

கழிவுநீர் கலந்து...

தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு படித்துறை அமைப்புடன், கரைகள் பலப்படுத்தப்பட்டன. தற்போது குளத்தை ஆழப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த குளத்தின் வடகரை பகுதி வழியாக குளத்திற்கு நீர்நிரப்பும் வாய்க்கால் வழியாக பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்து வருகிறது.

ஓரிரு மாதங்களில் கோவில் குடமுழுக்கு பணிகள் தொடங்க உள்ள நிலையில், குளத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்