வீடு புகுந்து திருடிய வாலிபர் சிக்கினார்
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து 38½ பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து 38½ பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
நகை திருட்டு
பொள்ளாச்சி அருகே நஞ்சேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சந்திரா(வயது 40). இவர் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பழனிக்கு சென்றார். பின்னர் 12-ந் தேதி திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 38½ பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி உதவி சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
வாலிபர் கைது
இந்த நிலையில் அவினாசியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர்(28) என்பவரை அந்த பகுதி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர், பொள்ளாச்சியில் சந்திரா என்பவரது வீட்டிலும் கைவரிசையை காட்டியதாக கூறினார். இதை அறிந்த தனிப்படை போலீசார், அங்கு சென்று ராஜசேகரை காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் சந்திராவின் வீட்டில் அவர் திருடியது உறுதியானது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 38½ பவுன் நகை மீட்கப்பட்டது.