வாலிபர் வெட்டிக்கொலை

தஞ்சை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-06 18:45 GMT

தஞ்சை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர்

தஞ்சையை அடுத்த கூடலூரை சேர்ந்தவர் மங்களதுரை. இவருடைய மகன் ஆர்யா(வயது 19). ராமாபுரம் பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் கவியரசன்(22), முருகானந்தம் மகன் அழகேசன்(19). கவியரசனின் உறவினர் வீடு கூடலூரில் உள்ளது. அங்கு அவர் அடிக்கடி சென்ற போது ஆர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் கவியரசனும், ஆர்யாவும் கடந்த தீபாவளி பண்டிகை அன்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று தஞ்சையை அடுத்த வீரமரசன்பேட்டை கிராமத்தில் திருவிழாவை காண கவியரசனும், ஆர்யாவும் தனித்தனியே வந்திருந்தனர். அப்போது இருவரும் எதேச்சையாக சந்தித்தபோது தீபாவளி பண்டிகை அன்று நடந்த சம்பவத்தை ஆர்யா நினைவு கூறி உள்ளார். இதனால் ஆர்யா மீது கவியரசன் ஆத்திரம் அடைந்தார்.

ஆனால் அதனை வெளிக்காட்டாமல் கவியரசன், ஆர்யாவை மோட்டார் சைக்கிளில் வயலூர் பகுதியில் உள்ள வயல்காட்டிற்கு அழைத்து சென்றார் அங்கு இருவரும் மது அருந்தினர். அப்போது கவியரசன் தனது நண்பர் அழகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் அவரும் அங்கு வந்தார்.

அப்போது முன்விரோதத்தை மனதில் கொண்டு கவியரசனும், அழகேசனும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக ஆர்யாவை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஆர்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார்.

2 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கவியரசன், அழகேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்