கலெக்டர் காரை நிறுத்த முயன்ற வாலிபர்

வேலூர் மக்கான் பகுதியில் கால்வாய் அடைப்பை சரிசெய்யும்படி கூறுவதற்காக கலெக்டர் காரை வாலிபர் நிறுத்த முயன்றார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுரை கூறினார்.

Update: 2023-05-31 18:39 GMT

கலெக்டர் காரை நிறுத்த முயற்சி

வேலூர் டோல்கேட் பகுதியில் கலெக்டர் பங்களா உள்ளது. இங்கிருந்து நேற்று காலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழக்கம்போல் சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வேலூர் பழைய மீன்மார்க்கெட் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென கலெக்டரை பார்த்ததும் சத்தம் போட்டுள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்து காரின் பக்கவாட்டில் சென்று கலெக்டர் சார் நில்லுங்கள்... கலெக்டர் சார் நில்லுங்கள்... உங்களிடம் கொஞ்சம் பேசணும் என்று கூறி உள்ளார். அதனை கவனித்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இதுகுறித்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

கழிவுநீர் கால்வாய் அடைப்பு

இதையடுத்து அவர் உடனடியாக மக்கான் சிக்னலுக்கு சென்று அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பின்னால் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அதில், அந்த வாலிபர் மக்கான் பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (வயது 30) என்பதும், மக்கான் சிக்னல் அருகே பஞ்சர் கடை நடத்தி வருவதும், அந்த பகுதியில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருவதால் அதனை சரிசெய்யும்படி கூறுவதற்காக கலெக்டரை அழைத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கலெக்டர் அலுவலகத்துக்கு ரிஸ்வானை அழைத்து சென்று கலெக்டரிடம் விவரத்தை கூறி ஒப்படைத்தார்.

அப்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வாகனத்தில் செல்லும் போது இதுபோன்று இடையூறு செய்யக் கூடாது. மோட்டார் சைக்கிளில் செல்லும்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் முறையாக மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கான் பகுதியில் உள்ள கால்வாய் அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்