மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
திருவண்ணாமலை அருகில் உள்ள டி.கல்லேரி கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் (வயது 56) என்ற ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மாணவிகளை மிரட்டியதாகவும் தெரிகிறது.
இவரது பாலியல் தொல்லைக்கு 24 மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்தனர்.
பணியிடை நீக்கம்
அதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
பின்னர் இதுகுறித்து தலைமை ஆசிரியர் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் லட்சுமணனை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் லட்சுமணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.