மேகதாது ஆய்வுப் பணியில் கர்நாடக அரசு வேகம் காட்டுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

மேகதாது ஆய்வுப் பணியில் கர்நாடக அரசு வேகம் காட்டுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2023-08-03 22:16 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தியும், காவேரி மேலாண்மை வாரியத்தின் மூலமாகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை திறந்துவிட கர்நாடக அரசிற்கு அழுத்தம் அளிக்குமாறு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நன்கு அதிகரித்துள்ள நிலையிலும், ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய உரிய நீரைத் திறக்காமல், உபரி நீரை மட்டும்தான் திறந்துவிடுவோம் என்ற அதிகார தோரணையில் கர்நாடக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், அதைத் தட்டிக் கேட்காமல் தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது விவசாய விரோதச் செயலாகும்.

காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். கர்நாடக அரசு உரிய நீரை உகந்த தருணத்தில் திறந்துவிட்டால்தான் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான வகையில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது, கர்நாடகாவில் 124.8 அடி ஆழமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் 112.6 அடி வரையிலும், 65 அடி ஆழமுள்ள கபினி அணையில் 64.15 அடி வரையிலும், 129 அடி ஆழமுள்ள ஹாரங்கி அணையில் 127.51 அடி வரையிலும், 117 அடி ஆழமுள்ள ஹேமாவதி அணையில் 108.75 அடி வரையிலும் தண்ணீர் இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதத்தில் வந்து சேர வேண்டிய நீரை கர்நாடக அரசு மறுப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிப்பதற்குச் சமம். ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும் என்ற நிலையில் வெறும் 5 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்து விடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது ஆகஸ்ட் மாதம் பிறந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஜூலை மாத நீரையே திறந்துவிடாதது தமிழக விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை நீடித்ததால், குறுவை சாகுபடி பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகிவிடும்.

இது குறித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு வேலூரில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசு தண்ணீர் விட்டுக் கொண்டுதான் உள்ளது" என்று பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியினைப் பார்க்கும்போது தமிழ்நாட்டிற்கு நீர்வளத் துறை அமைச்சர் இல்லையோ என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தி.மு.க. அரசின் இரட்டை வேடத்தை நன்கு உணர்ந்த கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடாததோடு மட்டுமல்லாமல், காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த இடத்தில் உள்ள எல்லைகளை அடையாளம் காணவும், அகற்றப்பட வேண்டிய மரங்களை ஆய்வு செய்யவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் 60 நாட்களில் அந்தப் பணிகள் முடிந்துவிடும் என்றும் கர்நாடக மாநில வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாட்டிற்கு உரிய மாதாந்திர நீரினை திறந்துவிடாமல், மேகதாது அணை கட்டுவதை தீவிரப்படுத்தும் கர்நாடக அரசிற்கும், கர்நாடக அரசின் செயலுக்கு சப்பைக்கட்டு கட்டும் தி.மு.க. அரசிற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் காங்கிரஸ் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தியும், காவேரி மேலாண்மை வாரியத்தின் மூலமாகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை திறந்துவிட கர்நாடக அரசிற்கு அழுத்தம் அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்