திற்பரப்பில் கோடை விடுமுறை களை கட்டியது

கோடை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவிக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-05-21 19:15 GMT

திருவட்டார்:

கோடை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவிக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை

கோடை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்தனர்.

கடந்த சில நாட்களாக மலையோர பகுதிகளில் மழை குறைவாக உள்ளதால் அருவியில் சற்று குறைவாகவே தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவர்கள், அருவியிலும் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் பூங்காவில் விளையாடி, அருவியின் எதிர்புறம் பச்சைப்பசேல் என காட்சி தரும் புல்வெளி பூங்கா மற்றும் அலங்கார நீரூற்றை பார்த்து ரசித்தனர். மேலும் அருவியின் மேல்பகுதியில் தடுப்பணை பகுதிக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

போக்குவரத்து நெருக்கடி

மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் அருவி சந்திப்பில் இருந்து வெகு தொலைவு வரை நீண்ட வரிசையில் நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

அருவியின் எதிர்புறம் பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளது. இந்த அறையில் போதிய சுகாதாரம் இல்லை என்றும் உடைமாற்றும் அறைக்குச்செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று உடை மாற்றும் அறையை அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஒப்பந்தத்தாரரிடம் அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

மாத்தூர் தொட்டிப்பாலம்

இதுபோல் மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். கோைட விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகையால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்