கல்லணை சீரமைக்கும் பணிகளை மேட்டூர் அணை திறக்கும் முன்பு முடிக்க வேண்டும்

கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக நடைபெற்று வரும் கல்லணை சீரமைக்கும் பணிகளை மேட்டூர் அணை திறக்கும் முன்பு முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-17 21:05 GMT

திருக்காட்டுப்பள்ளி:

கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக நடைபெற்று வரும் கல்லணை சீரமைக்கும் பணிகளை மேட்டூர் அணை திறக்கும் முன்பு முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லணை

காவிரி பாசன பகுதி விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பகிர்ந்து வழங்கும் அணையாக விளங்குவது கல்லணை. ஓடும் ஆற்றின் நீரை மறித்து கட்டப்பட்ட முதல் அணையாக விளங்குவது தஞ்சையில் உள்ள கல்லணை.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லணை இன்னும் பலம் வாய்ந்த அணையாக விளங்கி, காவிரி பாசனபகுதி பாசனத்திற்கு தண்ணீரை பகிர்ந்து வழங்கி வருகிறது.

சீரமைக்கும் பணி

கல்லணையில் உள்ள கட்டுமானங்கள், மதகுகள், இரும்பு ஷட்டர்கள், நீர் வெளியேறும் பகுதியில் தரைத்தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகள் ரூ.122.60 கோடி மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கல்லணை காவிரி ஆற்றின் உட்பகுதியில் தரைத்ததளம் அமைத்தல், காவிரி ஆற்றில் பொது மக்கள் இறங்கி குளிப்பதற்கான தொட்டி போன்ற அமைப்பு, கொள்ளிடம் ஆற்றில் இரும்பு ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி, ஷட்டர்களை ஏற்றி இறக்க புதிய மின்மோட்டார் பொருத்தும் பணி, தோகூர் பஸ் நிலையம் அருகே உள்ள வடிகால் பாலம் சீரமைப்பு பணி ஆகிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேட்டூர் அணை

அதேபோல் கல்லணை கால்வாயில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் தொடங்கப்பட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு முதல் முறையாக மேட்டூர் அணை மே மாதம் 24-ந் தேதி திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை அடைந்தவுடன், மே 27-ந்தேதி திறக்கப்பட்டது. தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கினால் நடப்பு ஆண்டு ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் மேட்டூர் அணை திறக்க 23 நாட்களே உள்ளதால் கல்லணை சீரமைக்கும் பணிகளை மேட்டூர் அணையை திறக்கும் முன்பு முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்