சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கும் பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும்
வனப்பகுதியில் இருந்து 1 கி.மீ. சுற்று பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கும் பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று ஸ்ரீமதுரை ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூர்
வனப்பகுதியில் இருந்து 1 கி.மீ. சுற்று பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கும் பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று ஸ்ரீமதுரை ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுற்றுச்சூழல் மண்டலம்
தேசிய வன உயிரின காப்பகத்தின் வெளி வட்ட பாதையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூர பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்து, அங்கு எவ்வித கட்டுமான பணிகளையும் செய்ய கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக மாநில அரசுகள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள கூடலூர் தொரப்பள்ளி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை, மசினகுடி ஊராட்சிகள் பாதிக்கப்படும் சூழலில் உள்ளது. இதேபோன்று கேரள மாநிலம் வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஊராட்சி கூட்டம்
இதனிடையே ஸ்ரீமதுரை ஊராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுனில் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரெஜி மேத்யூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணி முழுமை பெறாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அனைத்து வீடுகளையும் முழுமையாக கட்டிக்கொடுக்க அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வியாபாரிகள் ஆலோசனை
மேலும் தேசிய வன உயிரின காப்பகத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூர பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக செயல்படுத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள், எனவே அந்த பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர்.
இதேபோன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனை கூட்டம், கூடலூர் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவாதித்தனர். தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.