சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீர் அகற்றப்பட்டது
திருப்பத்தூரில் சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீர் அகற்றப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள திருப்பத்தூர்- வாணியம்பாடி நெடுஞ்சாலை, புதுப்பேட்டை ரோடு, சேலம் மெயின் ரோடு, வெங்களாபுரம், ப.முத்தம்பட்டி, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி பல்வேறு இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை பொக்லைன் எந்திரம் மற்றும் மோட்டோர்களை பொருத்தி தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதனால் நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் நீர் வரத்து கால்வாய் அடைபட்டு இருந்தது. அதனை உடனடியாக தூர்வாரி சரி செய்தனர்.