கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும்

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-30 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்றுப்பாலம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. கடந்த 1950ம் ஆண்டு கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட இந்த பாலம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையின் வழியே செல்லும் அனைத்து வகையான போக்குவரத்துக்கும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது.

தொடர்ந்து 24 மணி நேரமும் இந்த நெடுஞ்சாலையின் வழியே இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வகையான வாகனங்களும் வந்து சென்று கொண்டிருக்கின்றன. 70 வருடங்களைக் கடந்தும் வலிமை குன்றாமல் இருந்து வருகிறது.

மண் கழிவுகள்

இந்த பாலத்தில் உள்ள சாலையில் மழைகாலங்களில் ஒடும் தண்ணீர் வடிந்த பிறகு உருவாகும் மண் கழிவுகள் சாலையில் தேங்குகின்றன. மேலும் ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது அதிலிருந்து தொடர்ந்து மண் விழுந்து பாலத்தின் இருபுறங்களிலும் நடைபாதையை ஒட்டி சிறிய குவிந்து மண் திட்டுகளாக காட்சியளிக்கிறது. மேலும் காற்றில் மண் கழிவுகள் பறந்து, வாகன ஓட்டிகள் கண்களில் பட்டு, நிலைதடுமாறி விபத்துகளில் சிக்கும் அவல் நிலை உள்ளது. இவ்வாறு தேங்கும் மண் கழிவுகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அவ்வப்போது அகற்றி வருகின்றனர்.

இருந்தபோதும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்தப்பாலத்தை முழுமையாக தூய்மை செய்ய தயங்கி வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை பராமரிக்காமல் விட்டு விட்டதால் பாலத்தின் இருபுறங்களிலும் மண் குவிந்து தண்ணீர் தேங்கினால் வெளியேறி செல்லும் குழாயையும் அடைத்து விட்டது.

கோரிக்கை

இதனால் மழை பெய்யும் போது பாலத்தில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் இருந்து வருவதால் பாலத்தின் வலிமை குன்றுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறினர். இந்தப் பாலத்தை முறையாக சுத்தம் செய்யாததால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வல்லம்படுகையை சேர்ந்த ஒரு பொறியாளர் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் வந்து பாலத்தில் உள்ள மண்ணை முழுமையாக அகற்றி சுத்தம் செய்தார்.

அதன்பிறகு இந்த பாலத்தை சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மண் குவிந்துள்ள இந்த பாலத்தை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து தொடர்ந்து சுத்தம் செய்து பராமரிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்