சிம்ஸ் பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரம்
பழ கண்காட்சிக்கு சிம்ஸ் பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவருவதற்காக கோடை விழா, மலர் கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இதையொட்டி தோட்டக்கலை பூங்காக்களை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி பூங்காவில் உள்ள மலர் பாத்திகளில் என மொத்தம் 3 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பூங்கா பழப்பண்ணையில் 3 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. தற்போது ஊழியர்கள் மலர் செடிகளை பராமரித்து வருகின்றனர். இந்த செடிகளில் வருகிற ஏப்ரல் மாதத்தில் பூக்கள் பூக்க தொடங்கும். அதன் பின்னர் பூந்தொட்டிகள் நுழைவுவாயில், கண்ணாடி மாளிகை உள்ளிட்ட இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. பழ கண்காட்சிக்கு சிம்ஸ் பூங்காவை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.