கப்பல் பணிக்கு சென்று மாயமானஊழியரை மீட்டுத்தர வேண்டும்; நெல்லை கலெக்டரிடம், தாய் கண்ணீர் மனு

சென்னை நிறுவனத்துக்கு கப்பல் பணிக்கு சென்று மாயமான ஊழியரை மீட்டுத்தர வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம், தாய் கண்ணீர் மல்க மனு வழங்கினார்.

Update: 2023-09-11 19:42 GMT

சென்னை நிறுவனத்துக்கு கப்பல் பணிக்கு சென்று மாயமான ஊழியரை மீட்டுத்தர வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம், தாய் கண்ணீர் மல்க மனு வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவைச் சேர்ந்த மகாராஜா மனைவி மகாலட்சுமி மற்றும் உறவினர்கள், அந்த பகுதியைச் சேர்ந்த திரளான மக்கள், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், முற்றுகையிட்டவர்களை தடுத்து நிறுத்தி, கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவை அடைத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கலெக்டரிம், மகாலட்சுமி கண்ணீர் மல்க மனு வழங்கினார். அதில் கூறி இருப்பதாவது:-

கப்பல் பணிக்கு சென்று...

எங்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் தேவர்குளம். எனது கணவர் மகாராஜா, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். எங்களது மூத்த மகன் வெற்றி விஸ்வா, பி.எஸ்சி. கடல்சார் அறிவியல் படித்து விட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்தில் ஊழியராக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டணத்தில் கப்பலில் பணியில் இருந்த வெற்றி விஸ்வா, கடந்த 7-ந்தேதி இரவு 10 மணியளவில் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலமாக எங்களிடம் பேசினார். அப்போது அவர் அதிகாலை 4 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும், எனவே தூங்க செல்வதாக கூறி சென்றார். பின்னர் கடந்த 8-ந்ேததி அதிகாலை 5 மணியளவில் தனியார் கப்பல் நிறுவன மேலாளர், என்னுடைய செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், உங்கள் மகன் வெற்றி விஸ்வாவை காணவில்லை. 3 மாடிகளைக் கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போன், உடமைகள் மட்டும் கப்பலிலேயே இருப்பதாக கூறினார்.

அலட்சியமாக...

இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அந்த கப்பல் நிறுவனத்தை மீண்டும் தொடர்பு கொண்டு பேசியபோது, வெற்றி விஸ்வா எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை, அவர் குறித்த தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்பதாக கூறினர். இதையடுத்து எனது கணவர், உறவினர்களுடன் நேரில் சென்று விசாரித்தும் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கப்பல் வேலைக்கு சென்று மாயமான எனது மகனை மீட்டு தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்