உயிர் பறிக்கும் 'செல்பி' மோகம் ஆர்வத்தால் ஆபத்தை தேடும் இளைஞர்கள்

உயிர் பறிக்கும் ‘செல்பி’ மோகம் ஆர்வத்தால் ஆபத்தை தேடும் இளைஞர்கள்

Update: 2022-12-13 20:33 GMT

ஒரு நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கும் 'கேமரா'க்கள் அரிதாக பார்க்கப்பட்டன. புகைப்படக்கலைஞர்கள் பெரிதாக பார்க்கப்பட்டனர்.

இன்று தொழில்நுட்ப புரட்சியால் செல்போன்கள் வைத்து இருப்பவர்கள் அனைவருமே புகைப்படக்காரர்கள்தான். 5 வயது குழந்தை கூட ஒரு காட்சியை செல்போனில் படம் எடுத்துவிட முடிகிறது. செல்போன்கள் மூலம் படம் எடுக்கிற மோகம் பெரியவர் முதல், சிறியவர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.

'செல்பி' மோகம்

அதிலும் செல்போனில் 2 பக்கமும் படம்பிடிக்கிற கேமரா வசதி என்று வந்ததோ அன்று முதல் சுயமாக நம்மை படம் எடுத்து கொள்கிற 'செல்பி' என்கிற மோகம் ஒவ்வொருவரையும் தொற்றி கொண்டுவிட்டது. திருமண விழாக்களில் மணமக்களுடன் இணைந்து 'செல்பி', பொது இடங்களில் பிரபலங்களை கண்டுவிட்டால் ஆர்வத்தில் அவர்களுடன் 'செல்பி', சுற்றுலாத் தலங்களுக்கு சென்றால் இயற்கை எழில்மிகு காட்சிகளுடன் 'செல்பி', ஏன்? உயிரிழந்த சடலங்கள் முன்பு இருந்துகூட 'செல்பி' எடுக்கிற அளவில் 'செல்பி' இன்று அதுவும் இளைய தலைமுறையினரை ஆட்டிவித்து வருகிறது.

புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகம் 'லைக்ஸ்' பெற வேண்டும் என்ற ஆசையில், ஆர்வத்தில் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

உயிருக்கு உலை

இவ்வாறாய் ஓடும் ரெயில் முன்பு, பாறையின் மேல் நின்று, புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்ற காலங்களில் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்க முயன்று பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. இருந்தும் மக்களிடையே 'செல்பி' மோகம் குறைந்தப்பாடில்லை. சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 150 அடி உயர பாறையின் மேல் நின்று மணப்பெண் ஒருவர் 'செல்பி' எடுக்க முயன்றபோது கால் தவறி கல்குவாரி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். அவரை சினிமா கதாநாயகன் போல் மணமகன் தனது உயிரை துச்சமென நினைத்து கீழே குதித்து காப்பாற்றினார்.

இந்த சம்பவம் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதால் ஏற்படும் விபரீதத்தை எடுத்து காட்டும் எச்சரிக்கையாக அமைந்தது. உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் 'செல்பி' மோகம், இளைஞர்களிடம் குறையுமா? என்பது பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

நடிகை கஸ்தூரி

திரைப்பட நடிகை கஸ்தூரி:-

எல்லோரது வாழ்க்கையிலும் செல்போன் இப்போது நீக்கவே முடியாத அங்கமாகிவிட்டது. ஒரு காலத்தில் செல்போன் நம்மிடம் இல்லை. இப்போது செல்போன் இல்லாமல் நாமே இல்லை. செல்போன் இல்லாத காலம் என்பது இனி நினைவில் இருக்கவும் போவதில்லை.

செல்போன் நல்லதா, கெட்டதா? 'செல்பி' என்பது நல்லதா, கெட்டதா? என்பதை யோசிக்கும் காலத்தை நாம் எப்போதோ தாண்டிவிட்டோம். அது பற்றிய யோசனைகளை கடந்து, தற்போது செல்போனுடன் வாழ பழகிவிட்டோம்.

செல்போன் பயன்பாடு என்பதும், 'செல்பி' எடுப்பதும் என்பதும் அவரவர் நாரிகத்தைப் பொறுத்த விஷயமாகும். 'செல்பி' என்ற விஷயம், இப்போது மூச்சுக்காற்று போல பரவலாகி விட்டது. வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. 'செல்பி' எடுப்பதை தவறு என்று சொல்லவே மாட்டேன். ஆனால் அதன் போக்கு மாறிவிடக்கூடாது. அதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்:-

'செல்பி' எடுக்கும் பழக்கத்துக்கு இளைய தலைமுறையினர் பலர் அடிமையாகி உள்ளனர். சமுதாயத்தில் தனக்கு என்று ஒரு அங்கீகாரம் மற்றும் அடையாளத்தை தேடி செல்பவர்களே சமூக ஊடகங்களில் கிடைக்கும் வெறும் 'லைக்', 'ஷேர்', 'கமென்ட்' போன்றவற்றுக்காக ஆபத்தை உணராமல் விபரீதமான முறையில் 'செல்பி' எடுக்கிறார்கள்.

மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, எல்லோரையும் விடவும் வித்தியாசமாக இருக்கவேண்டும். அனைவரின் பார்வையும் நம் மீது திரும்பி உடனடியாக பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற செயல்களில் ஆபத்தை உணராமல் ஈடுபடுகிறார்கள். செல்பிக்காக உயிரை இழப்பது என்பது நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. எனவே இந்த மோகத்துக்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சுய கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும்.

தங்கள் பிள்ளைகளின் செல்போன்களை பெற்றோர் தொடர்ச்சியாக கண்காணித்து, அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு தேவையான அறிவுரைகளை அவ்வப்போது வழங்கவேண்டும். செல்பி மோகத்தில் இருந்து விடுபடவேண்டும் என்றால், தங்களுடைய எண்ணத்தையும், சிந்தனையையும் வேறு பல நல்ல வழிகளில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவேண்டும்.

எச்சரிக்கை அறிவிப்பு

சேலம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் யுவராஜ்:-

செல்பி மோகம் இன்று எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அது வேண்டும்... வேண்டாம்... என்று பேசுவதைவிட, பாதுகாப்பான முறையில், நினைவுகளை பதிவு செய்து கொள்வதற்காக சில இடங்களில் செல்பி எடுக்கலாம். குடும்ப சகிதமாக இணையும் நிகழ்வுகளில் எடுக்கப்படும் 'செல்பி' புகைப்படங்கள் காலம் கடந்தும் நமக்கு நினைவலைகளை ஏற்படுத்தும். ஆனால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பல நேரங்களில் செல்பி புகைப்படங்களால் ஆபத்து தான் ஏற்பட்டிருக்கிறது. சில இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு இருந்தும் அதை மீறி சென்று செல்பி எடுக்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.

ஏற்காட்டில் புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வரும் ரகுராஜ்:-

நான் கடந்த 25 ஆண்டுகளாக போட்டோகிராபர் தொழில் செய்து வருகிறேன். ஏற்காட்டில் சுமார் 40-க்கும் மேற்பட்ட போட்டோ தொழில் செய்யும் கலைஞர்கள் உள்ளனர். செல்போன் மற்றும் கேமராக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த செல்போன் பயன்பாட்டின் காரணமாக எங்களை சுத்தமாக மறந்து விட்டனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் பலர் ஆபத்தை உணராமல் பல்வேறு இடங்களில் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர்.

விடுபட வேண்டும்

படகு இல்லத்தில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் சிலர் படகில் நின்ற படி செல்பி எடுக்கின்றனர். படகில் இருந்து தவறி விழுந்தால் என்ன ஆகும் என்று சற்று கூட யோசிப்பதில்லை. எனவே படகு சவாரி மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு படகு குழாம் பணியாளர்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு செல்பி மோகத்தால் ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சியில் தடை செய்யப்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. இதேபோன்று சம்பவம் நடைபெறாமல் இருக்க செல்பி என்ற மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்.

கலாசார சீர்கேடுகள்

மல்லூரை சேர்ந்த தமிழ்செல்வி:-

ஒரு காலத்தில் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்று சொன்னார்கள். ஆனால் தற்போது ஆன்ட்ராய்டு செல்போன்கள் அதிகரித்துள்ள நிலையில் தனக்கு தானே புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். அதை 'செல்பி' என்று நாகரிகமாக சொல்லி கொள்கின்றனர். பெரும்பாலானோர் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையிலும் தங்களின் அன்றாட நிகழ்வுகளை `செல்பி' எடுத்து முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளும், ஷேர்களும் வாங்குவதை பெருமையாக கருதுகிறார்கள். மனித உயிரின் மதிப்பு தெரியாமல் சிலர் செல்பி மோகத்தால் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்கின்றனர். இதுபோன்று கலாசார சீர்கேடுகள் நடைபெறாமல் இருக்க பெற்றோர்களும், இளைஞர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மேட்டூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரமோகன்:-

மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பும் போது பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் வருகின்றனர். அவர்களில் சிலர் தண்ணீர் செல்லும் கால்வாயின் ஓரப்பகுதிகளில் நின்று கொண்டு செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது. செல்பி எடுக்க கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி கொண்டே இருந்தாலும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆபத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

=====


தண்டனை விதிக்கப்படுமா?

சினிமா, விளையாட்டு பிரபலங்களிடம் 'செல்பி' மோகம் அதிகம் இருக்கவே செய்கிறது. அதே நேரத்தில் தங்களது அனுமதி இல்லாமல் 'செல்பி' எடுப்பதை விரும்பாத பிரபலங்களும் இருக்கிறார்கள். நடிகர் சிவகுமார் தன்னிடம் 'செல்பி' எடுக்க முயன்ற நபரின் செல்போனை பறித்து வீசிய சம்பவமும் நினைவு கூரத்தக்கது.

'செல்பி' மோகத்தால் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுக்கக்கூடாது என்று அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபாரதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கைகளும் விடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

'செல்பி' படம் கண் சிமிட்டியது  முதலில் எப்போது தெரியுமா?

'செல்பி' இன்று, நேற்று அல்ல 183 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், நம்பித்தான் ஆகவேண்டும்! அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா நகரத்தில் பிரபல புகைப்பட ஆர்வலரான ராபர்ட் கார்னெலியஸ் தனது கேமராவில் இருந்து பின்னோக்கி படம் எடுத்தார். இதுதான் உலகிலேயே முதல் 'செல்பி' என்று கருதப்படுகிறது.

அதன் பின்னர் 1990-களில் கிழக்கு ஆசிய நாடுகளில் 'செல்பி' பிரபலமாகியது. 2000 ஆண்டுக்கு பின்னர் தான் இந்தியாவில் பரவலாக 'செல்பி' படம் கண் சிமிட்டியது. 2013-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு அகராதியில் 'செல்பி' என்ற வார்த்தை புதிதாக சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச 'செல்பி' தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இதில் கவனிக்கத்தக்க தகவல் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்