முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கை நகல் பெற்ற பின்னரே விதை விற்க வேண்டும்

முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கை நகல் பெற்ற பின்னரே விதை விற்பனை செய்ய வேண்டும் என்று தனியார் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுரை கூறினார்.

Update: 2022-07-22 17:14 GMT

விழுப்புரம்:

தனியார் விதை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி திண்டிவனத்தில் நடந்தது. இப்பயிற்சிக்கு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திண்டிவனம் கோட்ட வேளாண் இடுபொருள் வர்த்தகர்கள் சங்க தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் பேசியதாவது:-

விதை விற்பனையாளர்கள் அரசு சான்று பெற்ற விதைகளை விற்பனை செய்யவும், உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும்போது பருவத்திற்கு ஏற்ற ரகம்தானா என்பதை ஊர்ஜிதம் செய்து விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கை நகல் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். விதை கொள்முதல் பட்டியலுடன் விதை பகுப்பாய்வு அறிக்கையை பராமரிக்க வேண்டும்.

அறிவுரை

விதைக்குவியல் வரப்பெற்றவுடன் பணிவிதை மாதிரிகள் அனுப்ப வேண்டும். தனியார் ரகங்களை விற்பனை செய்யும்போது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்புத்துறை இயக்குனரால் வழங்கப்படும் பதிவுச்சான்று நகல் பெற்று விற்பனை செய்ய வேண்டும். மேலும் மழைக்காலத்தில் காற்றின் ஈரப்பதம் விதையினை பாதிக்காதவாறு பாதுகாப்பான இடத்தில் விதையை சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தினார்.

விழுப்புரம் விதை ஆய்வாளர் ஜோதிமணி பயிற்சி அளித்தார். இதில் மரக்காணம், மயிலம், செஞ்சி, மேல்மலையனூர், வல்லம், ஒலக்கூர், வானூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார் விதை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பயிற்சியின் முடிவில் திண்டிவனம் கோட்ட வேளாண் இடுபொருள் வர்த்தகர்கள் சங்க செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்