சிற்பக்கூட உருக்கு உலையில் புகுந்த சாரைப்பாம்பு பிடிபட்டது
சிற்பக்கூட உருக்கு உலையில் புகுந்த சாரைப்பாம்பு பிடிபட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் விருத்தாசலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோபு(வயது 45). சிற்பியான இவர் பித்தளை, வெள்ளி, தங்கம், வெண்கலம், ஐம்பொன் உள்ளிட்ட உலோகங்களாலான சிலைகளை கலைநயத்துடன் வடிவமைத்து வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் சிற்பக்கூட உருக்கு உலை அடுப்பு இருந்த பகுதிக்குச் சென்றபோது பாம்பு தோல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தோலை அப்புறப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை உருக்கு உலையில் சிலைகளை வடிவமைப்பதற்காக சென்றபோது பாம்பு உருக்கு உலையிலிருந்து வெளியே தலை நீட்டியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் உருக்கு உலையை பிரித்து எடுத்து அதில் இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.