சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு உருளுதண்டம் போட்டு மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு உருளுதண்டம் போட்டு மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-09 21:04 GMT

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது சேலம் குகையை சேர்ந்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகி பார்த்திபன் தலைமையில் 5 பேர் சாலையில் உருளுதண்டம் போட்டவாறு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க நூதன முறையில் வந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உருளுதண்டம் போட்டு நூதன முறையில் மனு கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதேபோல், கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரான சேலத்தை சேர்ந்த குணாளன் என்பவர் தனது முகத்தில் கருப்பு மையை பூசிக்கொண்டு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு, மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக முகத்தில் மை பூசிக்கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லுமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்