உயரமான சாலை சந்திப்பால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

கணியூரில் சாலை சந்திப்பு பகுதி மிகவும் உயரமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை

Update: 2023-09-08 11:09 GMT

போடிப்பட்டி

கணியூரில் சாலை சந்திப்பு பகுதி மிகவும் உயரமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

குறுகலான சாலை

கணியூரில் இருந்து கடத்தூர் செல்லும் பழமையான சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த சாலையிலிருந்து பாசன வாய்க்கால், விளைநிலங்கள் மற்றும் மதியழகன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை பிரிகிறது. குறுகலான இந்த வழித்தடத்தை தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் உரம், விதை உள்ளிட்ட பொருட்களை இரு சக்கர வாகனத்தில் இந்த வழித்தடத்தில் கொண்டு செல்கின்றனர். இந்த சாலை சந்திப்பு பகுதியின் குறுக்காக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது.

விபத்துக்கள்

பள்ளம் தோண்டி குழாய் பதிக்காமல் தரைமட்டத்துக்கு மேல் பதித்து அதன் மேல் காங்கிரீட் பூசப்பட்டுள்ளது. மேலும் குழாய் இணைப்பு பகுதி வெளியே நீட்டிக் கொண்டுள்ளது.இதனால் தாழ்வான சாலையிலிருந்து மேலே ஏறி கடத்தூர் சாலைக்கு வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அத்துடன் கடத்தூர் சாலையில் வரும் வாகனங்கள், திடீரென்று பக்கவாட்டிலிருந்து வரும் வாகனங்களின் மீது மோதாமல் தவிர்க்க கடும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.எனவே விபத்துக்களைத் தவிர்க்க சாலை சந்திப்பு பகுதியை சமப்படுத்தவும், தாழ்வான சாலையை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்