ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை பல்லக்கில் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்து கவுரவிப்பு
ஏரலில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை பல்லக்கில் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்து முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர்.
ஏரல்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தூய தெரசாள் நடுநிலைப்பள்ளியில் கடந்த 1988-1989-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சூசைராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சார்லஸ் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பார்க்கர் அலி, புனித ஒத்தாசை மாதா ஆலய ஊர் தலைவர் தாமஸ், பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் வில்சன் வெள்ளையாவை அவரது இல்லத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மேளதாளம் செண்டைமேளம் முழங்க ஊர்வலமாக மெயின் பஜார் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் அவருக்கு நினைவு பரிசாக தங்க மோதிரத்தை வழங்கி கவுரவப்படுத்தினர்.
தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கூடத்துக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கணினியையும் வழங்கினர். விழாவில் முன்னாள் மாணவர்களான ஏரல் ஆனந்த் ஜூவல்லரி உரிமையாளர் விவேகானந்தன், கே.சின்னத்துரை அன்கோ பார்ட்னர் திருநாவுக்கரசு, திருச்சி தாசில்தார் ரமேஷ், டாக்டர் உமா மகேஸ்வரன், தொழில் அதிபர் செந்தில் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேடயம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
------