பேரறிவாளன் விடுதலை வரவேற்கத்தக்கது அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பேரறிவாளன் விடுதலை வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2022-05-18 18:53 GMT

நாகர்கோவில்:

பேரறிவாளன் விடுதலை வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

புனிதர் பட்டம்

குமரி மாவட்டம் நட்டாலத்தில் அமைந்துள்ள புனிதர் தேவசகாயம் இல்லத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் புனிதர் தேவசகாயம் சொரூபத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நட்டாலத்தில் கி.பி 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு ரோமில் போப் ஆண்டவரால் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புனிதர் தேவசகாயம் நட்டாலம் பகுதியில் பிறந்து சமூக நீதிக்காக, சமத்துவத்திற்காக, சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்காக குரல் கொடுத்ததின் காரணமாக அன்றைய கால கட்டத்தில் ஆட்சிபுரிந்த மன்னர் மற்றும் ஆதிக்க சக்திகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி மரணமடைந்தார்.

வரவேற்கத்தக்கது

மேலும் குமரி மாவட்டத்தில் ஆதிக்கசக்திகளுக்கு எதிராக தோள்சீலை போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் ஆன நிலையில் மாபெரும் மனிதருக்கு மிக பெரிய அங்கீகாரம் கிடைத்ததில் உலக தமிழர்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. பேரறிவாளன் விடுதலைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தார். சட்ட ரீதியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

---

Tags:    

மேலும் செய்திகள்