தேனி மக்களை மகிழ்வித்த மழை

தேனியில் நிலவிய வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் வகையில் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.

Update: 2023-08-30 23:45 GMT

தேனியில் மழை

தேனி மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திர காலம் மீண்டும் வந்து விட்டதோ? என்று நினைக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேனியில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாலை வரை நீடித்த மழை இரவில் பெய்யவில்லை.

இந்நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணியளவில் தேனியில் சாரல் மழை பெய்தது. மிதமான காற்றுடன் பெய்த இந்த மழை சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர். சிலர் நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டும், கையில் கிடைத்த சாக்குப்பை, பாலித்தீன் பையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடியும் பயணம் செய்ததை காண முடிந்தது.

மக்கள் மகிழ்ச்சி

அதன்பிறகு மழை சற்று நேரம் ஓய்ந்து இருந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த சாரல் மழை இரவு வரை நீடித்தது. இந்த மழையால் வெப்பம் முற்றிலும் தணிந்து குளு, குளுவென குளிர்ச்சியான சூழல் திரும்பியது.

பகலில் கடும் வெயிலாலும், அதன் தாக்கத்தால் இரவில் வெப்பத்தாலும் மக்கள் மின்விசிறி இன்றி தூங்க முடியாத நிலையில் தவித்து வந்தனர். இரவில் மின்தடை ஏற்பட்டால் தூக்கமும் தடைபடும் நிலை இருந்தது. 2 நாட்களாக பெய்த மழையால் அந்த நிலை மாறி குளிர்ச்சியான சூழல் நிலவியது. இது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. இதே மழை தொடர்ந்து நீடித்தால் வறண்டு கிடக்கும் நீர்நிலைகள் உயிர்ப்பெறும் என்பதோடு, விளை நிலங்களிலும் பயிர் சாகுபடிக்கு பயனளிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்