முட்டைகோஸ் கொள்முதல் விலை குறைவு

கோத்தகிரி பகுதியில் முட்டைகோஸ் கொள்முதல் விலை குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-02-07 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி பகுதியில் முட்டைகோஸ் கொள்முதல் விலை குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மலை காய்கறிகள்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

அங்கிருந்து மாநிலத்தின் பிறபகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் உறைபனி தாக்கம் குறைவாக இருந்ததாலும், அவ்வப்போது மழை பெய்ததாலும் முட்டைகோஸ் பயிர்கள் செழித்து வளர்ந்து உள்ளன.

கொள்முதல் விலை

இன்னும் 1½ மாதத்தில் முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராகி விடும் நிலையில் உள்ளது. இருப்பினும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து எரிசிபெட்டா கிராம விவசாயி ஒருவர் கூறியதாவது:-

கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் பயிரிட்ட தோட்டங்களில் தொடர்ச்சியாக அதே பயிர்களை பயிரிட்டால் மண்ணின் வளம் குறைந்து சாகுபடி குறைய வாய்ப்பு உள்ளது. மண்ணின் வளம் குறையாமல் தடுக்க இயற்கை உரமிட்டு, ஏற்கனவே கேரட், பீன்ஸ் பயிரிட்ட தோட்டங்களில் மாற்றுப் பயிராக முட்டைகோஸ் பயிரிட்டு உள்ளோம். தற்போது பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வருகிறது. முட்டைகோஸ் பயிர்கள் பயிரிட்டு 45 நாட்கள் ஆகியுள்ள நிலையில், செடிகளில் காய் பிடிக்க வேண்டி பயிர்களுக்கு உரமிட உள்ளோம். தற்போது சில இடங்களில் முட்டைகோஸ் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இருப்பினும், கொள்முதல் விலை குறைவாக உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை யானது. கடந்த சில நாட்களாக ரூ.5 முதல் ரூ.10 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்பனை ஆகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.8 செலவாகிறது. உரிய விலை கிடைத்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்